Interview

சி‌னி‌மா‌ எக்‌ஸ்‌பி‌ரஸ்‌ இதழி‌ல்‌ வா‌சகர்‌கள்‌ கே‌ட்‌ட கே‌ள்‌வி‌களுக்‌குஅளி‌த்‌த பதி‌ல்‌கள்‌ சி‌ல....


டியர் பாஸ்கர்! உங்களைப் பிரத்தியேகமாகத்  தொடர்ந்து கவனிக்கும் உங்களின் தீவிர ரசிகர்களில் ஒருவன் நான். இது உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை. ஒரு காமெடியனாக, வில்லனாக, ஒரு சீரியஸ் நபராக பல்வேறு முகங்கள் கொண்ட "குட்டிக் கமல்' நீங்கள். ஆனாலும்  இந்தத் திரையுலகம், உங்களுக்குரிய இடத்தை இன்னும் வழங்காமல் கஞ்சத்தனம் காட்டுகிறதென்பது உண்மை. இது எதனால் பாஸ்கர்?

தமிழரசு, திருச்சி.

தமிழரசு அவர்களே! நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கும் பட்டத்திற்கு நான் அருகதையானவனா? என்பது என் கேள்வி! நீங்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு முகங்கள் என்றால், ஒரு நடிகர் என்பவர் எல்லா விதமான வேடங்களையும் ஏற்று நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இதுவரைக்கும் அந்த மாதிரி உழைத்தவர்கள் எவ்வளவோ பேர் பெரிய இடத்துக்கு வந்திருக்கிறார்கள். ஒரே மாதிரி நடித்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சலிப்பு தட்டி விடும். அந்த மாதிரி சலிப்பு தட்டாமல் இருக்க வேண்டும் என்றால் வித்தியாசமான வேடங்கள் கிடைக்கும்போது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். கமல் அண்ணாவோடு நீங்கள் என்னை ஒப்பிடுறீங்க!

அது சந்தோஷமாக இருந்தாலும் அதற்கு நான் பொருத்தமானவன் இல்லை. அந்தளவிற்கு நான் இன்னும் உயரவில்லை. கமல் அண்ணா ஒரு மலை; நான் ஒரு சிறு கூழாங்கல்! இருந்தாலும் உங்களுடைய கருத்துக்கும், புகழ்ச்சிக்கும், இந்த கேள்விக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஸ்கர் அண்ணா! உங்களுக்கு பறக்கும் சக்தி இருந்திருந்தால்?

என். கிருஷ்ணவேணி, குரோம்பேட்டை.

பாஸ்போர்ட், விசா இல்லாமலே பல வெளிநாடுகளுக்கு சென்றிருப்பேன். உலகம் சுற்றி பார்த்திருப்பேன்.

பெண்களைப் போல் ஆண்களும் தாலி அணியவேண்டும் என்று சட்டம் வந்தால்?

எம். கலையரசி, மாடம்பாக்கம்.

தங்கத்தின் விலை இன்னும் தாறுமாறாக ஏறி இருக்கும்.

டியர் பாஸ்கர்! வழுக்கை தலைதான் உங்கள் முதலீடா?

ரவி, வானதிராயன்பட்டினம்.

முடி இருந்தபோது நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை! தலை வழுக்கையான பிறகு நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தது! இதலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

"மொழி'யின் வரி வடிவமே! நீங்கள் ஹிந்தியில் உங்கள் வாய்ûஸ, ஒரு படத்துக்காக "டப்' பண்ணியதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமல் தெரிவித்தார். நீங்கள் ஏன் "காக்காய் பிடிக்கும் பாஷை'யை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை? கற்றுக் கொண்டிருந்தால் இதற்கு மேலும் உயரப் பறக்க உங்களால் முடியும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தக் கேள்வி.

தேவனாம் பிரியன், மயிலாடுதுறை.

"மொழி'யின் வரி வடிவம் என்று சொன்னால் அது அந்தப் படத்தின் இயக்குனர் ராதாமோகன்தான். அவர் தான் இப்படி ஒரு வேடத்தை உருவாக்கி, எனக்கு சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார். எனக்கு நல்ல பெயர் கிடைத்ததற்கு காரணமானவர் அவர்தான். ஹிந்தியில் "தசாவதாரம்' படத்தில் நான் நடித்த வேடத்திற்கு நானே குரல் கொடுத்தேன். அதற்குக் காரணம் கமல் அண்ணா அவர்கள்தான். ஹிந்தி எழுத்தாளரும் சொல்லியிருந்தார், என்னுடைய மாடுலேஷனும், வாய்ஸýம் நல்லா இருக்கு. பாஸ்கருக்கு ஹிந்தி தெரியும். அவரையே பேச சொல்லுங்கள் என்று! நானும் அதுக்கேற்ற மாதிரி டப்பிங் உதவியாளரோட ஒத்துழைப்போடு ஹிந்தியில் பேசினேன். எல்லோரும் நல்லா இருக்குன்னு சொன்னார்கள்.

உங்களது நடிப்புக்கு உங்கள் மனைவி ஆலோசனைகள் கூறுவதுண்டா?

லதா, காமராஜ் நகர், சென்னை.

ஆலோசனை எல்லாம் சொல்ல மாட்டாங்க, ஏதாவது தப்பு பண்ணியிருந்தால் அதை சுட்டிக் காட்டுவாங்க.

வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்னு  சொல்வாங்க. அது டப்பிங் பேசும் கலைஞர்களுக்கும் பொருந்தும்தானே?

முகவை ராஜா, திருவல்லிக்கேணி.

கண்டிப்பாக! வாய் இருந்தால்தானே பேச முடியும், பிழைக்க முடியும்!

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நீங்கள் யதார்த்தமாக நடிக்கிறீர்கள். உங்களுக்கு இந்த ஆற்றல் எங்கிருந்து கிடைத்தது?

மோகன ப்ரியன், திருவிடைமருதூர்.

அந்தக் காலத்தில் ரங்காராவ் அவர்கள், எஸ்.வி.சுப்பையா அவர்கள், பாலையா அப்பா போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் ரொம்பவும் யதார்த்தமாக நடித்தார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கமல் அண்ணா, ரஜினி அண்ணா, சத்யராஜ் அண்ணா என்று கிட்டத்தட்ட இபபோது நடிக்கக் கூடிய எல்லோருமே அந்த யதார்த்தத்தை கையாளுகிறார்கள்.

அப்படியிருக்கும்போது நான் மட்டும் அந்த யதார்த்தத்தை விட்டு விலகியிருந்தால் எப்படி? அது மட்டுமல்ல, எனக்கு தரக்கூடிய வசனங்களை இயல்பாக பேசி நடிக்கணும்னு என் மனதுக்கு தோணும். "சின்ன பாப்பா, பெரிய பாப்பா'வில் இருந்து அதை ஃபாலோ பண்றேன்.

காதலுக்கு ஏங்கிய அனுபவம் உண்டா?

இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

காதலுக்காக ஏங்கிய அனுபவமெல்லாம் கிடையாது. ஆனால் நான் காதலிச்சிருக்கேன். இப்போதும் காதலிச்சிட்டிருக்கேன். அதவாது என் குடும்பத்தை, குழந்தைகளை, நண்பர்களை, சினிமாவை, இந்தியாவை, நம் மொழியை, நம் வாழ்க்கையை என எல்லாத்தையும் காதலிக்கிறேன்.

"மொழி' படத்தில் உங்களது பாத்திரம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அந்த மாதிரி கேரக்டரை நேரில் பார்த்திருக்கீங்களா?

ஜெ. ரமேஷ், வடபாதி.

இல்லை, நான் பார்க்கவில்லை. எங்கள் இயக்குனர் ராதாமோகன் அவர்கள் பார்த்திருப்பதாகச் சொன்னார்.

நீங்கள் குதிரை சவாரி செய்வீர்களாமே? எப்பொழுதில் இருந்து இந்த பழக்கம்?

வீ. பாலகிருஷ்ணன்,  ஓரத்தூர்.

சிறு வயதில் இருந்தே எனக்கு குதிரை சவாரி என்றால் பிடிக்கும். ஆனால் அப்போது அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. இப்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக குதிரை சவாரி செய்கிறேன்.

பட்டாபி அண்ணா! தயாரிப்பாளரை பார்க்கும்போது முதலாளி என்று சொல்வீர்கள். ஆனால் பணம் தராத முதலாளிகளை என்ன சொல்வீர்கள்?

ஜே.கே. புருஷோத்தமன், சித்தூர்.

அவரையும் முதலாளின்னுதான் சொல்வேன். காரணம் அவர்கிட்டதானே பணம் இருக்கு!

நீங்கள் நடிக்கும் படங்களின் காமெடி காட்சிகளுக்கு நீங்கள்தானே வசனம் எழுதுறீங்க?

கே. மோகன், மங்கலம்.

அப்படியில்லை. இயக்குனர் காமெடி காட்சி அமைக்கும்போது எனக்கு தோன்றுகிற சில கருத்துக்களை அவர்களுடைய ஒப்புதலோடு மாற்றி அமைப்பேன். அவ்வளவுதான்!

எம்.எஸ். பாஸ்கர் அவர்களே! உங்களுக்கு அரசியலுக்கு வருகிற எண்ணம் இருக்கிறதா? அப்படி வந்தால் உங்கள் கட்சியின் கொள்கை என்னவாக இருக்கும்?

ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

அரசியல் என்பது ஒரு பெரிய கடல். அதில் நீச்சல் அடிக்கும் அளவிற்கு எனக்கு சாமர்த்தியம் கிடையாது. ஒரு நீச்சல் குளத்தில் அல்லது ஒரு குட்டையில் நீச்சல் அடிக்கலாம். கடலில் நீச்சல் அடிப்பது கஷ்டம். அதனால் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம்  இல்லை.

ஒலிம்பிக்கில் ஓட விட்டால் 100 மீட்டர் தூரத்தை எத்தனை வினாடிகளில் கடப்பீர்கள்?

சதய்நாராயணன், அயன்புரம், சென்னை.

அது என்னை விரட்டும் நாயோட வேகத்தை பொறுத்தது!

நீச்சல் குளத்தில் டைவ் அடித்த அனுபவம் உண்டா?

ஆர். பழனி, காட்பாடி.

அப்படி டைவ் அடிக்கும்போது என்ன நினைப்பீர்கள்?

 ஆழத்தில் டைவ் அடித்த அனுபவம் உண்டு. அப்படி டைவ் அடிக்கும்போது சீக்கிரமாக கரைக்கு போய் சேர வேண்டும் என்று நினைப்பேன்.

மற்ற மொழிப் படங்களில் நடிக்கும் வாயப்பு கிடைத்திருக்கிறதா?

நாகஜோதி, மதுரை.

இதுவரை மற்ற மொழி படங்களில் நடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

பாஸ்கர் அண்ணா! உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

மகேஷ்பாபு, சென்னை.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஓரளவிற்குத் தெரியும்.

இன்னொரு "பேசும்படம்' தமிழில் தயாரிக்கப்படுமானால், அதன் கதாநாயகனாக நீங்கள் மட்டுமே நடிக்க வல்லவர் என்கிறான் என் நண்பன். உங்கள் கருத்தென்ன?

அசோக், சென்னை.

உங்கள் நண்பருடைய கருத்துக்கு, அவர் என் மீது வைத்திருக்கும் மதிப்பிற்கு ரொம்பவும் கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். "பேசும்படம்' படத்தில் கமல் அண்ணா நடித்தது மிகப் பெரிய, மிகச் சிறந்த முயற்சி. உங்கள் நண்பர் சொல்வது போல் நான் மட்டும்தான் அதற்கு சரியான ஆள் என்று எல்லோரும் நினைத்து, ஒட்டு மொத்த ரசிகர்களும் என்னை நடிக்கச் சொல்லி, அதற்கு தயாரிப்பாளரும் சம்மதித்தால் முதலில் நான் கமல் அண்ணாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குவேன். அதன் பிறகு கமல் அண்ணா அளவிற்கு பண்ண முடியாது என்றாலும் ஓரளவுக்கு சிறப்பாக நடிப்பேன்.

உங்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் எதுவும் போட்டுக் கொள்ளவில்லையே ஏன்?

எம். கோகுல், வடசங்கதி.

பட்டம் போட்டுக்கலாம். அதன் பின்னாடி அதை பறக்க விடுவதற்கு நூல் வேண்டும்.  நூல் வாங்கி அந்த பட்டம் விடுவதற்கு நேரம் வேண்டும். நேரம் இல்லாததால் பட்டம் வேண்டாம் என்று விட்டு விட்டேன்.